ஐரோப்பிய நாடுகளைக் கடுமையான வெப்ப அலை வாட்டி வதைத்து வரும் நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் அந்நாட்டு அதிகாரிகள் அவசரத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
வெப்ப அலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மருத்துவமனைகளின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின்படி, பாரிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் சனிக்கிழமை காலை 07:00 மணி வரையிலும், அதே போல் சனிக்கிழமை நண்பகல் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலும் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 06:00 மணி முதல் மறுநாள் காலை 07:00 மணி வரை மதுபானங்களை வெளியில் எடுத்துச் செல்வதற்கான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், உரிமம் பெற்ற மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த புதன்கிழமை இரவு சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தீவிரமடைந்து வரும் இந்த வானிலை மாற்றத்தை அடுத்து, பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு நாட்டின் சுகாதார எச்சரிக்கை நிலையை மிக உயர்ந்த மட்டத்திற்கு உயர்த்தியுள்ளார்.
வெப்ப அலையின் கொடூரத்தால் பாரிஸ் பிராந்தியத்தில் காரினுள் சிக்கி 3 வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன், ரென்னெஸ் நகரில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக 5-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். “இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் தாங்கள் பாதுகாப்பானவர்கள் என்று நினைத்து பொறுப்பற்ற முறையில் வெளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என பாரிஸ் மேயர் இம்மானுவேல் கிரகோயர் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், புகழ்பெற்ற ‘கரோராக்’ இசை விழாவின் முதல் நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடும் வெப்பம் காரணமாக பிரான்ஸின் மூன்று அணுமின் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தற்போது பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரிட்டனை உலுக்கி வரும் இந்த வெப்ப அலை, அடுத்ததாக ஜெர்மனி மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ஜெர்மனியில் இன்று வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது