கடத்தல் காரர்களால் மணலுடன் கைவிடப்பட்ட நிலையில் புதையுண்டிருந்த மகேந்திரா வாகனம்//
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோரியடி உல்லாச கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக மணல் கடத்தும் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி பகுதியில் மகேந்திரா ரக வாகனத்தில் வந்த கும்பல் சட்டவிரோதமாக மணல் அள்ளி ஏற்றியுள்ளது.
கடற்கரை வீதி ஊடாக பொலிஸ் ரோந்து வாகனம் பயணித்துள்ளது. இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை கை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தப்பி ஓடியவர்கள் கடற்றொழில் நிமித்தம் கடற்கரையில் படுத்திருந்த மீனவர்கள் மீது மோதுண்டுள்ளனர். அவ்வூர் மீனவர்கள் எழுது விரட்டிச்சென்று அவர்களை விசாரித்த போது பதில் கூறாது தப்பிச்சென்றுள்ளனர்.
மீனவர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பருத்தித்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கடத்தல் காரர்களால் மணலுடன் கைவிடப்பட்ட நிலையில் புதையுண்டிருந்த மகேந்திரா வாகனம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையினை மேற்கொள்ளவதுடன் வாகன இலக்கம் உள்ளிட்ட விபரங்களின் அடிப்படையில் சட்டவிரோத மணல் கடத்தலுடன் தொடர்புடையவர்களை கண்டு பிடிக்க பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்