அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, காவலில் வைக்கப்பட்டிருந்த போது பல்வேறு வடிவங்களில் துஷ்பிரயோகங்களுக்கு (Mistreatment) உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து தாங்கள் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளிடம் இன்றைய தினமும் (16) வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் சாலே சிஐடி (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த போது அவர் மோசமாக நடத்தப்பட்டதாகக் கூறி, அவரது உறவினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இந்த புகார் அளிக்கப்பட்டிருந்தது.
வெளியாகியுள்ள தகவல்களின்படி, சாலே அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கூடத்தை ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது, அவர் ஒரு சாதாரண சிஐடி சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்ததும், அங்கு போதிய காற்றோட்டம் இல்லாமை உள்ளிட்ட பல அடிப்படை குறைபாடுகள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இச்சோதனையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு, சிஐடி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், சாலேயின் சிறைக்கூடத்திற்கு அருகில் உள்ள பிற சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சிஐடி அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விசாரணை தொடர்வதால், சிஐடி அதிகாரிகளிடம் இருந்து மேலதிக வாக்குமூலங்களைப் பெற ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சாலேவுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.