பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார் பிணையில் விடுவிக்கப்பட்ட முடிவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தக் கலைஞர் விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்து தான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்து நான் கருத்து தெரிவிக்கப் போவதில்லை. இங்கு முக்கியமானது என்னவென்றால், இளம் கலைஞர் சங்கீத்சன் விடுவிக்கப்பட்டு அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார் என்பதுதான். அது நடந்ததைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், அந்த இளம் கலைஞர் தனது திறமையையும் அபிலாஷைகளையும் நேர்மறையான மற்றும் அர்த்தமுள்ள வழியில் தொடர்ந்து தொடர வாழ்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இந்த இளம் தமிழ் ராப் பாடகர், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட வீடியோ பதிவுகள் எல்.டி.டி.ஈ (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் அல்லது பெருமைப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறி, யாழ்ப்பாணப் போலீசாரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் எழுந்த கடும் எதிர்ப்புகள் மற்றும் தொடர் அழுத்தங்களைத் தொடர்ந்து, நேற்றைய தினம் (ஜூன் 12) அவர் சாவகச்சேரி நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது