ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் வெளிப்படைத்தன்மை கொண்ட நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தவும் புதிய கிரிக்கெட் யாப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஊடகவியலாளர்கள் மத்தியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழுவின் தலைவர் இரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.
‘கிரிக்கெட் விளையாட்டின் பங்குதாரர்கள் பொதுமக்களே என்பதால், புதிய யாப்பு விதிகள் தயாரிக்கும் போது பொதுமக்களின் அபிப்பிராயங்களும் கோரப்படும். ஜனாதிபதியிடமிருந்தோ, விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்தோ எங்களது குழுவுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை, எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளை சுயாதீனமாக நிறைவேற்றுவோம்’ எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் பல வருடங்களாக தலைவராக பதவி வகித்த ஷம்மி சில்வா தலைமையிலான நிறைவேற்றுச் சபை கடந்த மாதம் ராஜினாமா செய்ததை அடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் இரான் விக்ரமரட்ன தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிலைமாறுதல் குழு நியமிக்கப்பட்டது.
அதன் பின்னர் இரான் விக்ரமரட்ன தலைமையிலான நிலைமாறுதல் குழுவினர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்போர்கூடத்தில் வியாழக்கிழமை (20) முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினர்.
ஊடகவியலாளர் சந்திப்பில் பிரபல தொழில் அதிபர் பிரகாஷ் ஷாவ்டர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அங்கு தொடர்ந்து பேசிய இரான் விக்ரமரட்ன,
‘இலங்கை கிரிக்கெட்டை உயரிய நிலைக்கு, வெற்றிக்கு இட்டுச் செல்லக்கூடிய பின்னணியை கட்டி எழுப்புவதும் புதிய யாப்பு விதிகளைத் தயாரிப்பதுமே எங்களுக்கு உள்ள மிகப் பெரிய பொறுப்பாகும். அதாவது நிர்வாக முறைமையில் மாற்றம் செய்யப் போகிறோம். வெளிப்படைத்தன்மையான நிதி முகாமைத்துவத்தை ஏற்படுத்தவுள்ளோம். இது இன்று நேற்று உருவான கதை அல்ல. இது தொடர்பாக பல வருடங்களாக எல்லா இடங்களிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் கட்சி பேதம் இன்றி விவாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மாற்றம் வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டுள்ளனர். எனவே புதிய யாப்பு விதிகளைத் தயாரிக்கவுள்ளோம்.
‘கிரிக்கெட் என்பது ஒரு செயற்குழுவுக்கோ, ஒரு தரப்புக்கோ சொந்தமானதல்ல. எனவே அதன் பங்குதாரர்கள் அனைவரிடமும் கருத்துக்களை, அபிப்பிராயங்களைப் பெறவுள்ளோம். கிரிக்கெட் விளையாடுபவர்கள், மாவட்டங்கள், மாகாணங்கள், கழகங்கள், பாடசாலைகள் அனைவற்றினதும் கிரிக்கெட் பிரதிநிதிகள், கிரிக்கெட் வெற்றிநடை போடவேண்டும் என விரும்பும் பொதுமக்கள் ஆகியோர் உட்பட கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைவரிடமும் கருத்துக்கள் பெறப்படும். அதன் பின்னர் யாப்பு விதிகள் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவினரிடம் சமர்ப்பிப்போம். யாப்பு விதிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்போம்.
‘ஒவ்வொரு ரூபாவும் பாடசாலை பிள்ளைகளின் கிரிக்கெட் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். மகளிர் கிரிக்கெட், தேசிய கிரிக்கெட் ஆகியவற்றை உயரிய நிலைக்கு கொண்டு செல்வது குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் ஐசிசியின் பிரதி தவிசாளர் இம்ரான் கவாஜா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பொதுச் செயலாளரும் ஐசிசி பணிப்பாளர்களில் ஒருவருமான தேவஜித் சல்கியா ஆகியோர் இலங்கை வருகை தந்து நிலைமாறுதல் குழுவினர், ஜனாதிபதி, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
ஐசிசி பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை சுமுகமாகவும் ஆக்கபூர்வமாக அமைந்தததாக எரான் விக்ரமரத்ன கூறினார்.
புதிய யாப்பு விதிகளை தயாரிப்பதற்கும் தேர்தல் மூலம் புதிய நிர்வாக உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்வதற்கும் எவ்வளவு காலம் செல்லும் என அவரிடம் கேட்கப்பட்டபோது, இவை எல்லாம் நிறைவேற ஆறு மாதங்கள் வரை செல்லலாம் என்றார்.
இது இவ்வாறிருக்க, கிரிக்கெட் நிர்வாகம் முறைப்படுத்தப்பட்ட பின்னர் சாதி, இனம், மதம் அல்லது வர்க்கம் போன்ற பேதங்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது என்பது உறுதிசெய்யப்படும் எனவும் இரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நிலைமாறுதல் குழு உறுப்பினர் சிதத் வெத்தமுனி, ‘பல விடயங்கள் ஒன்றுகூடும்போதுதான் வெற்றி கிடைக்கும். எனவே, பயிற்றுநர்களின் தரத்தை உயர்த்துவது, சிறுபராயத்திலிருந்து பாடசாலை கிரிக்கெட் மட்டத்தை உயர்த்துவது, மத்தியஸ்தர்களின் தரத்தை உயர்த்துவது ஆகிய மூன்று விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் உடன் எடுக்கப்படும்’ என்றார்.
நிலைமாறுதல் குழு உறுப்பினர்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார ஆகியோர் வெளிநாடுகளில் இருக்கின்றபோதிலும் அவர்களுடன் தொடர்ச்சியாக இணையவழி ஊடாக கலந்துரையாடப்படுவதாகவும் சிதத் வெத்தமுனி கூறினார்.
இரான் விக்ரமரட்ன தலைமையிலான நிலைமாறுதல் குழுவில் சிதத் வெத்தமுனி, பிரகாஷ் ஷாவ்டர், சட்டத்தரணி டினால் பீரிஸ், சட்டத்தரணி உப்புல் குமாரப்பெரும, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார ஆகியோருடன் அவன்தி கொலம்பகே, துஷிர ரதெல்ல ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.