இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அமெரிக்க அஞ்சல் அதிகாரிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய 625,000 அமெரிக்க டொலர்கள் இணையவழியாகக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக, அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) விசேட குழுவொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உத்தியோகபூர்வமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக எவ்வித விசேட எஃப்.பி.ஐ (FBI) குழுவினரின் வருகையும் இலங்கைக்கு இடம்பெறவில்லை என்று அமெரிக்கத் தூதரகம் இன்று (23) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
“சைபர் கொள்ளை குறித்து விசாரிக்க எஃப்.பி.ஐ இலங்கையை வந்தடைந்தது” (FBI arrives in Sri Lanka to investigate cyber thefts) என்ற தலைப்பில் ‘டெய்லி மிரர்’ (Daily Mirror) நாளிதழில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் போதே அமெரிக்கத் தூதரகம் இவ்விபரத்தை அறியவப்படுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளிலும் பின்பற்றப்படும் வழமையான உத்தியோகபூர்வ நடைமுறைகளின்படி, அந்தந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இருதரப்பு சட்ட அமலாக்க ஒத்துழைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக (Law enforcement cooperation) அமெரிக்கத் தூதரகங்களுக்குள் ஒரு ‘எஃப்.பி.ஐ சட்ட இணைப்பாளர்’ (FBI Legal Attaché) அலுவலகம் நிரந்தரமாகப் பேணப்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதரகம் விபரித்துள்ளது.
இப் பின்னணியில், தற்போதைய விசாரணைகளுக்காக அமெரிக்காவிலிருந்து விசேடமாகப் புதிய உளவுத் தூதுக்குழு எவரும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்றும், தூதரகத்தில் உள்ள வழமையான அதிகாரிகளே உள்ளூர் பிரிவினருக்குத் தேவையான சட்ட ஒருங்கிணைப்பு உதவிகளை வழங்கி வருவதாகவும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது