எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்ட்டின் (Isabelle Martin) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய மேக்ரோ-பொருளாதார சவால்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியைத் (Cyclone Ditwah) தொடர்ந்து ஏற்பட்டுள்ள சமூக-பொருளாதார தாக்கங்கள் குறித்து இருதரப்பும் விரிவாகக் கலந்துரையாடினின.
பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிவாரணம், மறுசீரமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய சஜித் பிரேமதாச, இதற்காக சர்வதேச உதவிகளின் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதுடன், சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது ஆதரவுத் திட்டத்தின் கீழ் விதித்துள்ள நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் இங்கு வலியுறுத்தினார்.
இலங்கையின் உலர் வலயத்திலுள்ள (Dry Zone) விளிம்புநிலை பெண் விவசாயிகளுக்கு ஆதரவளித்தல், காலநிலை-நடைமுறை விவசாயம் (Climate-smart agriculture) மற்றும் நிலையான நில, நீர்நிலைப் முகாமைத்துவம் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘குளோபல் அஃபியர்ஸ் கனடா’ (Global Affairs Canada) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் 5 மில்லியன் கனடிய டொலர் பெறுமதியான “அக்சஸ் ஸ்ரீலங்கா” (Access Sri Lanka) திட்டத்தைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், கனடாவின் காலநிலை நிதியுதவி மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்குத் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் ஜனநாயக ஆட்சிமுறை, மனித உரிமைகள் மற்றும் இன நல்லிணக்கம் ஆகிய விவகாரங்களும் உள்ளடக்கப் பட்டிருந்தன. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்குக் கட்டுப்பட்டிருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்திய சஜித் பிரேமதாச, உள்ளடக்கிய ஒரு ஜனநாயக முறைமைக்கு மாகாண சபைத் தேர்தல்கள் (Provincial Council elections) நடத்தப்படுவது இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் இருதரப்பும் கலந்துரையாடின. இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் கனடாவின் பரந்த இந்தோ-பசிபிக் வர்த்தக மூலோபாயத்திற்குள் (Indo-Pacific commercial strategy) இலங்கையை ஒருங்கிணைத்தல் ஆகிய நோக்கங்களுடன் இலங்கையிலுள்ள கனடிய வர்த்தக சம்மேளனம் (Canadian Chamber of Commerce) சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்களை இருதரப்பும் இதன்போது வரவேற்றுப் பாராட்டின.