சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகொட்டான்சேனை – களுவன்கேணி வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை, சைக்கிளில் பயணித்த நபரொருவர் மீது கேப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவியும் பிள்ளையும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதனடிப்படையில் விபத்துத் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையில், இது விபத்து அல்ல என்பதும், திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்பட்ட கொலை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபருக்கும் சந்தேகநபருக்கும் இடையே நீண்டநாட்களாக நிலவி வந்த பகைமையே இந்த கொலைக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியிருந்த 24 வயதுடைய கேப் ரக வாகனத்தின் சாரதி தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சந்தவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.