முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளிலும் நிதித்துறையிலும் உயர்மட்ட பதவிகளில் இருந்தவர்களின் திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கபில சந்திரசேன போன்ற நபர்களின் மரணம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் அல்லது அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கௌரவத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த விடயம் குறித்து அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவே தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும். அண்மைக்காலமாக சிறைச்சாலைகளிலும், நிதித் திணைக்களங்களிலும் முக்கியமான சாட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மர்மமான முறையில் உயிரிழப்பது நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என்பது கண்டறியப்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, மக்கள் போராட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக கிளர்ச்சிகளைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது. ஆனால், தற்போது மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் மத்தியில் இருந்த நம்பிக்கை வேகமாக குறைந்து வருகிறது.
நாட்டில் தற்போது முறையான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. அரசாங்கம் தவறு செய்யும் போது அதனைச் சுட்டிக்காட்டவும், நல்ல விடயங்களை ஆதரிக்கவும் கூடிய ஒரு பலமான எதிர்க்கட்சியை நாம் காணவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கத்தினாலும், முறையான வேலைத்திட்டம் அவர்களிடம் இல்லை. பிணைமுறி மோசடி போன்ற பாரிய ஊழல்கள் இன்று மறக்கடிக்கப்பட்டுள்ளனநாம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிபணிந்து செயற்படவில்லை. நாட்டின் நலனுக்காக உண்மைகளைத் தொடர்ந்து பேசுவோம் என்றார்.