முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை வரும் ஜூன் மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்தில் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளோம். அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும் உலகளவில் வலதுசாரிக் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் பயணிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே இலங்கையிலுள்ள மிகச் சிறந்த தலைவர்கள் எனத் தெரிவித்த ஹரின், ஐக்கிய மக்கள் சக்தியுடன் சிறந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வருவோம். அதன் பின்னர் நாட்டில் புதிய அரசியல் திருப்பங்கள் ஏற்படும். ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இலங்கைக்குப் பெரிய பிரச்சினைகள் வரும் என்பதை நாம் கடந்த டிசம்பர் மாதத்தில் கூறியபோது மக்கள் எம்மைப் பார்த்துச் சிரித்தார்கள்.
உலகப் போரினால்தான் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று எரிபொருள் வரிசைகளில் நின்ற மக்கள் கூறினார்கள். ஆனால், உலகப் போர்ச் சூழல் இருந்தாலும் பங்களாதேஷில் விலை அதிகரிக்கவில்லை, இந்தியாவிலும் எரிபொருள் விலை உயர்த்தப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
இலங்கையில்தான் மிக அதிக அளவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் வரிசைகளில் நின்று கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பேசும் சில முச்சக்கரவண்டி சாரதிகள் போன்றவர்கள் இது உலகளாவிய பிரச்சினை, நாம் என்ன செய்வது என்று கேட்கிறார்கள். இதனால்தான் இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிலும் இதேபோன்று அப்போதைய நிதியமைச்சர் டொலரின் மதிப்பை செயற்கையாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். தற்போதும் 325 ரூபாய் அளவில் டொலரின் மதிப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இது 340 அல்லது 350 ரூபாய் வரை உயரும் என்று நான் முன்பே கூறினேன்.
எம்மிடமுள்ள புள்ளிவிவரங்களின்படி, அரசாங்கம் டொலர் விவகாரத்தில் ஒரு நெருப்பை மறைத்து வைத்திருப்பது போலச் செயல்படுகிறது. இது திடீரென்று வெடித்து வெளியேறும்போது டொலரின் மதிப்பு கட்டுக்கடங்காமல் உயரும்.
அன்றாட உணவு, குடிநீர் மற்றும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் திண்டாடும் காலம் வரும்போது, இன்று அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பேசும் அனைத்து வீண் பேச்சுக்களுக்கும் பதில் கிடைத்துவிடும்.
மக்கள் தங்களுக்கு இரண்டு முறை தொடர்ந்து தவறு நடந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால் அதை இன்னும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். எம்மைப் பொறுத்தவரை எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டு அமைதியாக எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தற்போது ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் மிகச் சிறந்த ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் நேர்மறையான ஒரு நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்.
உலகளவில் வலதுசாரி அரசியல் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் பயணிப்பதற்கு மிகச் சிறந்த இருவர் ரணில் மற்றும் சஜித் ஆவர். இவர்களோடு ஹர்ஷ டி சில்வா போன்ற பெரும் திறமையாளர்களைக் கொண்ட ஒரு குழுவும் எங்களிடம் உள்ளது.
வெறும் வாய்ச் சொல் வீரர்கள் போன்றல்லாமல், விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தெம்பே போன்ற நீர்த்தேக்கங்களை உருவாக்கி, இலவசக் கல்வி, இலவசச் சுகாதாரம் மற்றும் நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றை உருவாக்கி இந்த நாட்டை உலகிற்கு அடையாளம் காட்டிய கட்சிக்கும் அதன் வலதுசாரிக் கொள்கைக்கும் நாட்டு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் ஆதரவளிப்பார்கள் என நான் நம்புகிறேன் என்றார்.