வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம்என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டு;ள்ளதாவது
வாகரைப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைப்பதற்கான முன்மொழிவை நாம் முன்வைத்துள்ளோம். இது, கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உபதவிசாளர் அலுவலகத்தில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
வாகரைப் பிரதேச சபை குறைந்த வருமானம் கொண்ட ஒரு சபையாக இருந்தாலும், பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. இந்த வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க மத்திய அரசின் நிதி ஆதரவைப் பெறுவதற்கான வழிகளை நாம் தேட வேண்டும்.
ஆனால் இன்றைய நிலைமையில், வீதிகளைப் புனரமைத்தல், வீதி விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குக் கூட தேவையான நிதி இல்லை. இதேவேளை, நாட்டில் பெருமளவில் நிதி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக டீசல் மற்றும் நிலக்கரி இறக்குமதிகளில் ஊழல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், குறைந்த வருமானம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கு ஏன் தேவையான அபிவிருத்தி நிதி வழங்கப்படவில்லை என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகிறது. காணாமல் போனது மக்களின் வரிப்பணமே. அரசாங்கத்தின் அலட்சியமே இந்த நிலைக்கு காரணமாக உள்ளது. இவ்வாறான செயல்பாடுகள் தொடர்ந்தால், நாடு மேலும் வங்குரோத்து நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது.
எங்களின் நிலைப்பாடு அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவது அல்ல. ஆனால், இந்த அரசாங்கம் திருந்தி மக்களுக்கு உரிய சேவைகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், வட்டார மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவது மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களைச் சிறப்பாக முன்னெடுப்பது குறித்து நாம் தொடர்ந்து கவனம் செலுத்த உள்ளோம்.”