சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி அஸ்வத்தாமன் வெளிநாட்டிற்குத் தப்ப முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ரவுடி நாகேந்திரனின் மகனான அஸ்வத்தாமன் ‘ஏ2’ குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நாகேந்திரன் உயிரிழந்த நிலையில், இவ்வழக்கின் முக்கிய நபராக அஸ்வத்தாமன் இருந்து வருகிறார்.
அண்மையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அஸ்வத்தாமன் உட்பட 12 பேருக்கு ஜாமீன் வழங்கியிருந்தது. ஜாமீனில் வந்தவர்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கக் காவல்துறை ஏற்கனவே ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நேற்று புதன்கிழமை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்குத் தப்பிச் செல்ல அஸ்வத்தாமன் முயன்றுள்ளார். அப்போது குடியுரிமைத் துறை அதிகாரிகள் அவரைப் பிடித்துச் சென்னை பெருநகர காவல்துறையிடம் ஒப்படைத்தனர். நீதிமன்ற நிபந்தனைகளை மீறி வெளிநாடு தப்ப முயன்றதால், அஸ்வத்தாமனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் முறையீடு செய்யக் காவல்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#ArmstrongCase #Aswathaman #BreakingNews #ChennaiPolice #BengaluruAirport #Extradition #LOKoutNotice #CrimeUpdate #TamilNaduNews #BSP #AswathamanArrested #ThailandEscape #CourtBailViolation #ChennaiCrime #PoliticalNews #April30