2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சைபர் மோசடி தொடர்பான ஒழுக்காற்று விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 2026 ஏப்ரல் இறுதியில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (ERD) அதிகாரி ஒருவர் குளியாப்பிட்டியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த அதிகாரி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவுஸ்திரேலிய கடன் வழங்குநர் ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனை வேறொரு இடத்திற்கு திசைதிருப்பிய சைபர் மோசடி தொடர்பாக, நிதியமைச்சின் நான்கு சிரேஷ்ட அதிகாரிகளை அரசாங்கம் பணி இடைநிறுத்தம் செய்துள்ளது.
இவ்வாறு இடைநிறுத்தப்பட்டவர்களில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஒருவரும், பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் (PDMO) பணிப்பாளர் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஒருவரும் அடங்குவர்.
முன்னதாக, இந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகுமாறு குறித்த அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், அவர் CID-யில் முன்னிலையாகவில்லை.