செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி ஞா. ரனீத்தா தெரிவித்துள்ளார்.
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் நாளான இன்று புதன்கிழமை (ஏப்ரல் 29) நடைபெற்ற பணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு கூறினார்.
இன்றைய அகழ்வு பணிகளின் போது ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட இரு என்பு கூட்டு தொகுதிகளின் பகுதியளவான என்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில என்பு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன — அவற்றை சுத்தம் செய்த பின்னரே எத்தனை என்பு கூடுகள் என்பதை உறுதியாக கூற முடியும் என்றார்.
அகழ்வு பணிகள் 1.5 அடி முதல் 2 அடி ஆழத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆழத்தில் இதற்கு முன்னரும் என்பு கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இன்றைய அகழ்வு பணிகளின் போது ஓர் இடத்தில் சந்தேகத்திற்குரிய கரிய நிற மண் காணப்பட்டது. அதனால் அரித்தட்டு மூலம் அந்த மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் சிறிய வலை போன்ற ஒரு பொருளும் மீட்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்