சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச் சட்டசபைக்கு கடந்த 23-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்த கையோடு மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வைத்துச் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் மே 4-ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 5 மையங்களும், சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தலா 4 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை அன்று எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி முடிவுகளை அறிவிக்கத் தேவையான கூடுதல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அந்தந்த மையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
#TNElection2026 #VoteCounting #ElectionCommission #TamilNaduPolls #EVM #CountingDay #May4 #ElectionResults #ChennaiNews #Madurai #Salem #Cuddalore #StrongRoom #SecurityMeasure #TamilPolitics #VictoryWait #BreakingNews #DemocraticFestival