ருகோணமலை எரிசக்தி மையம் (Trincomalee energy hub) போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் இனி நேரத்தை வீணடிக்க முடியாது என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று தெரிவித்தார். இத்திட்டத்திற்கான காலக்கெடு இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், திட்டத்தின் சிக்கல்தன்மை மற்றும் பெரும் நிதி முதலீடுகள் காரணமாக இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியத் துணைத் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணனுடன் வருகை தந்துள்ள திரு. மிஸ்ரி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையில், திட்டத்தின் விவரங்களை இறுதி செய்வதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்று கூறினார்.
“இது குறித்து 2023 இல் நாங்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். அதைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்புத் திட்டமாக இது வடிவெடுத்தது. முதற்கட்டமாக தென்னிந்தியாவிலிருந்து திருகோணமலைக்கு ஒரு குழாய் வழித்தடத்தை (pipeline) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இதில் அடங்கும். அதேவேளை, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தை (tank farm complex) மேம்படுத்துவதும் இதில் அடங்கும். இது தொடர்பான கணிசமான தகவல்களை நாங்கள் இப்போது இலங்கையுடன் பகிர்ந்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற சந்திப்புகளின் போது இது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அவர் கூறினார். “உலகெங்கிலும், குறிப்பாக இந்தப் பிராந்தியத்தில் எரிசக்தி விலைகளும் அவற்றின் கையிருப்பும் பெரும் கவலையை ஏற்படுத்தி வரும் இக்காலகட்டத்தில், இந்தத் திட்டத்தின் முன்னேற்றம் சிறந்த பலனைத் தரும்,” என்றார் அவர்.
“இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம், அதன் மூலோபாயத் தன்மை மற்றும் அவசரம் ஆகியவற்றை இன்று வலியுறுத்துவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எங்கள் இலங்கை சகாக்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.