வியாழக்கிழமை அதிகாலை மொன்ட்ரியலின் தென்மேற்குப் பகுதியில் தாக்கப்பட்ட நபர் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று 2:30 மணி அளவில் மொன்ட்ரியல் பொலிஸாருக்கு (SPVM) பல அவசர அழைப்புகள் (911) கிடைத்தன.
பார்க் கார்னோ (Parc Garneau) வீதிக்கு அருகிலுள்ள மான்க் புலிவார்ட் (Monk Boulevard) பகுதியில், நபர் ஒருவர் மழுங்கிய பொருளை (blunt object) கையில் வைத்துக்கொண்டு அவ்வழியே செல்வபர்களை அச்சுறுத்துவதாகத் தகவல் கிடைத்தது.
பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, உடலின் மேல் பகுதியில் காயங்களுடன் ஒருவர் மயங்கிய நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டனர்.
மொன்ட்ரியல் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜொஹானி சார்லண்ட் (Johany Charland) கூறுகையில், “பாதிக்கப்பட்ட நபர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முதற்கட்ட தகவல்களின்படி, சந்தேக நபர் மழுங்கிய பொருளொன்றைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் உடலின் மேல் பகுதியில் தாக்கியுள்ளார். பின்னர் பொலிஸார் வருவதற்கு முன்னரே அவர் வாகனமொன்றில் தப்பிச் சென்றுள்ளார்” எனத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மொன்ட்ரியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.