மேற்கு ஆசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பரவலாகக் காணப்படும் மனிதாபிமானத் துயரங்களைக் குறைப்பதற்கும் இந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வை நோக்கிய முயற்சிகளை முன்னெடுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நீண்டகால ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைவரையும் உள்ளடக்கிய அமைதிச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இந்த போர்நிறுத்தத்தை எளிதாக்குவதற்கும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கும் இராஜதந்திர ரீதியாகப் பங்காற்றிய தரப்பினரின் பங்களிப்பையும் இந்த அறிக்கை அங்கீகரித்துள்ளது.