எட்மண்டனைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர், ஐந்து பெண்களை கடத்தியுள்ளதுடன், ஒரு நாயை துன்புறுத்தியதாக 26 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். ALERT (ஆல்பர்ட்டா சட்ட அமலாக்கக் குழு) நடத்திய நீண்ட கால விசாரணைக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம், பாதிக்கப்பட்ட ஒரு பெண் உதவிய கேட்டு காவல்துறையை அணுகியதிலிருந்து இந்த விசாரணை தொடங்கியது. அந்தப் பெண் சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்பு கொள்ளப்பட்டு, எட்மண்டனுக்கு வரவழைக்கப்பட்டதாகவும், பின்னர் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஜொனாதன் அலார்ட் (Jonathan Allard) என்பவர் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்:
பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது மற்றும் அதன் மூலம் ஆதாயம் அடைந்தது.
கட்டாய சிறைவைப்பு மற்றும் தாக்குதல்: பாதிக்கப்பட்டவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது மற்றும் தாக்கியது.
விலங்கு வன்கொடுமை: ஒரு நாயைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது (Bestiality), நாய்க்குத் தேவையற்ற வலி மற்றும் காயங்களை ஏற்படுத்தியது, மேலும் அந்த விலங்கிற்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்காமல் அலட்சியப்படுத்தியது.
இதுவரை ஐந்து பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆனால், அலார்ட்டால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். ALERT பிரிவின் ஸ்டாஃப் சார்ஜென்ட் கிறிஸ் ஹேய்ஸ் கூறுகையில், “பாதிக்கப்பட்ட எவரேனும் இருந்தால் தயக்கமின்றி முன்வந்து பேச வேண்டும்; அவருக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தர நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு 211 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த வழக்கில் தொடர்புடைய தகவல் தெரிந்தவர்கள் உள்ளூர் காவல்துறையையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (1-800-222-TIPS) அமைப்பையோ அழைக்கலாம்.
குற்றம் சாட்டப்பட்ட ஜொனாதன் அலார்ட் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது அடுத்த நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.