யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச காணிகளை நீண்ட கால குத்தகைக்கு வழங்குவது தொடர்பான முக்கிய தீர்மானங்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று எடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டத்தில், பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு காணிகளை வழங்குவதற்கான முதற்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரச காணிச் சட்டத்தின் கீழ் நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் விரிவாக ஆராயப்பட்டன. இதில் தகுதியுடைய சில விண்ணப்பங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதால், அவை குறித்த சாத்தியப்பாட்டு அறிக்கைகளை (Feasibility Reports) சமர்ப்பிக்குமாறு மாவட்டச் செயலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மேலதிக செயலர்கள் (காணி மற்றும் நிர்வாகம்), பிரதேச செயலாளர்கள், மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் மற்றும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.