இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இலங்கை சுற்றுலாத்துறை மாதம் தோறும் சுமார் 70 மில்லியன் டொலர்களை இழந்து வருவதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.7% வீழ்ச்சியடைந்துள்ளது. (கடந்த ஆண்டு 229,298 பேர்; இந்த ஆண்டு 183,979 பேர்).
துபாய், தோஹா போன்ற முக்கிய விமான போக்குவரத்து மையங்கள் (Transit Hubs) பாதிக்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் நீண்டதூரப் பயணிகளின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சியால் சிறு மற்றும் நடுத்தர அளவிலான சுற்றுலா வணிகங்கள் (SMEs), விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை அரசு தனது சுற்றுலா மேம்பாட்டு உத்திகளை மாற்றியமைத்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்குப் பதிலாக இந்தியா, பங்களாதேஷ், மாலைத்தீவு, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அதிக விளம்பரங்கள் செய்யப்படவுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லாத நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சரிந்து வரும் வருமானத்தைத் தக்கவைக்க உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் திட்டங்களையும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
போர்ச் சூழல் காரணமாக உலகெங்கிலும் உள்ள மக்கள் பயணம் செய்வதற்கான மனநிலையில் இல்லை (Lack of mental readiness) என்றும், பாதுகாப்புக் கருதித் தத்தமது நாடுகளிலேயே இருக்க விரும்புவதாகவும் SLTDA பணிப்பாளர் நாயகம் மல்காந்தி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும், டிட்வா (Ditwah) சூறாவளியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தொழில் தற்போதைய போர்ச் சூழலால் மேலும் நலிவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்த ஆண்டு நிர்ணயித்த 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற இலக்கை எட்டுவது தற்போதைய நிலையில் பெரும் சவாலாக மாறியுள்ளது.