ஈரானில் ட்டு வீழ்த்தப்பட்ட விமானத்திலிருந்து காணாமல் போன விமானி ஒருவரை, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் துணிச்சலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானுக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E ஸ்டிரைக் ஈகிள் (F-15E Strike Eagle) போர் விமானத்தில் பணியாற்றிய கேர்ணல் (Colonel) அந்தஸ்து கொண்ட அதிகாரி ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
ஈரானின் மலைப்பாங்கான பகுதியில் எதிரிகளின் எல்லைக்குள் சிக்கியிருந்த அந்த அதிகாரியை மீட்க, அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
“அவரை மீட்டுவிட்டோம்! கடந்த சில மணிநேரங்களில் அமெரிக்க இராணுவம் தனது வரலாற்றிலேயே மிகத் துணிச்சலான மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அவர் இப்போது பாதுகாப்பாக உள்ளார்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக மற்றொரு அமெரிக்க விமானியும் ஈரானில் மீட்கப்பட்டார். ஆனால், இரண்டாவது மீட்பு நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக அது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
எதிரி நாட்டு எல்லைக்குள் ஆழமாகச் சென்று, இரண்டு அமெரிக்க விமானிகளைத் தனித்தனியாக மீட்டது ராணுவ வரலாற்றிலேயே இதுவே முதல்முறை என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மீட்பு நடவடிக்கைகளின் போது அமெரிக்கத் தரப்பில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்றும், இது ஈரானிய வான்பரப்பில் அமெரிக்காவின் வான் அதிகாரத்தை (Air Superiority) நிரூபிப்பதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்தார். மீட்கப்பட்ட அதிகாரி காயமடைந்துள்ள போதிலும், அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.