உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர வீட்டுக்கு செல்ல வேண்டும். ஏனெனில் இவரின் கீழ் இடம்பெறும் இந்த விசாரணையில் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை என மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பின் பிரதான செயலாளர் சானக்க பண்டார தெரிவித்தார்.
மக்கள் போராட்டத்தின் குடிமக்கள் அமைப்பு வெள்ளிக்கிழமை (3) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்தும் உதய கம்மன்பிலவின் புத்தக வெளியீட்டுக்கு, ராஜபக்ஷ்வினருக்கு எதிராக குற்றம்சாட்டியவர்களும் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
அதேநேரம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னர் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நாட்டுக்கு வெளிப்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்து தற்போது ஒருவருடம் ஆகியுள்ளது. ஆனால் ஜனாதிபதியால் அதனை செய்ய முடியாமல் போயிருக்கிறது.
இந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆளும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக செயற்பட்டவர். அப்படியானால் இந்த தாக்குதல் தொடர்பில் பொறுப்பு அவருக்கு இல்லையா என கேட்கிறோம். அதேபோன்று குற்றப்புலனாய்வு பிரிவின் அப்போதைய பிரதிப் பணிப்பாளருக்கு இல்லையா என கேட்கிறோம். ஆனால் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் என அன்று சரத் வீரசேகரவும், விமல் வீரவன்சவும் தெரிவித்தார். அதனையே தற்போது உதய கம்மன்பிலவும் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தும் வெறும் நாடகமாகும். இந்த நாடகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.
அதனால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவதாக தெரிவித்த ஜனாதிபதிக்கு அதனை கடந்த ஏப்ரல் மாதம் செய்ய முடியாமல் போனது. அதனால் அவர் இந்த மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் சூத்திரதாரியை வெளிப்படுத்தவில்லை என்றால், குற்றப்புலனாய்வு பிரிவில் இருந்து ஷானி அபேசேகர வீட்டுக்கு செல்ல வேண்டும். பிரதி பொலிஸ் மா அதிபரும் வீட்டுக்கு செல்ல வேண்டும். அதேநேரம் இந்த தாக்குதலை தடுக்க தவறிய ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வு பிரின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபரையும் கைது செய்ய வேண்டும்.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஷானி அபேசேகர எப்போதும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் விடயத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலேயே செயற்பட்டு வருகிறார். அதனால் இவரின் கீழ் இடம்பெறும் இந்த விசாரணையில் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கில்லை என்றார்.