மத்திய கிழக்கில் நிலவும் உலகளாவிய மோதல்கள் மற்றும் பருவகால மாற்றங்களால் எரிவாயு விலைகள் உயர்ந்து வருவதால் கனடியர்கள் கடும் நிதி நெருக்கடியை உணர்கின்றனர்.
டொராண்டோ வில் ஹியூயன் என்பவர் சாதாரணமாக தனது சிறிய ரக காரில் எரிபொருள் நிரப்ப 50 டொலர் போதுமானதாக இருக்கும் என்று கூறுகிறார். ஆனால் திங்கள்கிழமை மதியம் டொராண்டோ நகரின் மையப்பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் அவர் எரிபொருள் நிரப்பியபோது அதற்கு 50 டொலருக்கும் அதிகமாக செலவானதாகவும் அது கவலையளிப்பதாகவும் தெரிவித்தார்.
“இது மிகவும் விலை உயர்ந்தது. எனக்கு இது பிடிக்கவில்லை” என்று ஹியூயன் கூறினார். “நான் இப்போது மின்சார காருக்கு மாறத் திட்டமிட்டுள்ளேன்.”
லிட்டருக்கு 1.72 டொலர் – மற்றும் சில கனடிய நகரங்களில் இதைவிட மிக அதிக விலை – நிலவுவதால் அவர் மட்டுமல்லாது வாகனங்களை பயன்படுத்தும் பலரும் விரக்தியில் உள்ளனர்.
“நமக்கும் போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் அதற்கான விலையை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்று ஒருவர் தெரிவித்தார்.
ஈரான் போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணைநடைமுறையில் மூடப்பட்டிருப்பது உலகளாவிய எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்துள்ளது. இதனால் இதனால் கனடாவில் வாகனங்களை பயன்படுத்தும் பலரும்அதிகச் செலவைச் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கனடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
“அரசாங்கங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவி தற்காலிகமாக எரிபொருள் வரிகளை நிறுத்தி வைப்பதே ஆகும்” என்று கனடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு இயக்குனர் பிராங்கோ டெர்ராசானோ கூறினார். இந்த வரிக்குறைப்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
“ஏற்கனவே பல கனடியர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது இந்த எரிபொருள் விலை உயர்வு வாழ்க்கையை இன்னும் விலை உயர்ந்ததாக மாற்றுகிறது” என்று அவர் கூறினார்.
கனடா தனது தற்போதைய வரி முறையை மாற்றாமல் உள்ள நிலையில் மற்ற நாடுகள் தங்கள் குடிமக்களை இந்த விலையேற்றத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன:
இத்தாலி: நுகர்வோர் எரிபொருள் வரிகளில் 20 நாள் குறைப்பு மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு டீசல் செலவை ஈடுகட்ட வரிச் சலுகைகள் உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல்: ஆகிய நாடுகள் எரிபொருள் மீதான தற்காலிக வரிக்குறைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியா: மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வரிகளை மூன்று மாதங்களுக்கு பாதியாகக் குறைத்துள்ளது. விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாகாணங்கள் எரிபொருள் தேவையைக் குறைக்க பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கியுள்ளன.
ஆஸ்திரேலியா அல்லது இத்தாலியின் பாதையை கனடா பின்பற்றுமா என்று கேட்டபோது நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பேன் வரிச் சலுகை குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை.
அரசாங்கம் “சூழ்நிலையை மிகவும் கவனமாக கண்காணித்து வருகிறது” என்று கூறிய ஷாம்பேன் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்க சர்வதேச பங்காளிகளுடன் கனடா பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். சந்தையை நிலைப்படுத்த மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களை வெளியிடுதல் மற்றும் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.