கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலும்வல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது, கார் ஒன்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தும்மோதர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையில், சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட காருடன் 245 கிராம் ஐஸ் போதைப்பொருள்,206 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த நபர் கார் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதோடு, இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்காக சமூக வலைதளச் செயலிகளை சூட்சுமமாகப் பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் கெப்பட்டிபொல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.