சவுதி அரேபியாவிலுள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை (மார்ச் 27) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் ஈரானிய இராணுவம் பல ஏவுகணைகளையும் தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலின் போது வீரர்கள் தங்கியிருந்த கட்டடம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 12 அமெரிக்க வீரர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பும் விமானங்கள் சேதமடைந்துள்ளன. ஈரான் வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் ஒரு விமானம் முழுமையாக எரியும் காட்சிகள் பதிவாகியுள்ளன.