மருதங்கேணிப் பகுதியில் யானைகள் உட்புகுந்தமை திட்டமிட்ட சதியா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மருதங்கேணிப் பகுதியில் யானைகள் என்பது வியப்புக்குரியது. எக்காரணம் கொண்டும் யானைகள் அவ்விடத்திற்கு வருவதற்கு இயலாது. எனவே இது யாருடைய திட்டமிட்ட சதியாக இருக்குமோ என நாம் கருதுகிறோம்.
எனவே இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்த இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்த போதிலும், இது தொடர்பான தீர்மானம் எவையும் நிறைவேற்றப்படவில்லை. வரலாற்றில் இல்லாதவாறு அண்மைக்காலமாக மருதங்கேணிப் பகுதியில் யானைக் கூட்டம் பெரும் அட்டகாசம் புரிவதாகச் செய்திகள் வெளிவந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.