இவ்வாண்டின் ‘ புவி மணித்தியாலம்’ நாளை 28ம் திகதி இரவு 8.30 முதல் 9.30 வரை கொண்டாடப்படவுள்ளது. நாங்கள் வாழும் எங்கள் பூமியைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் இந்த புவி மணித்தியாலம் கொண்டாடப்படுகின்றது.
இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி நாகமுத்து பிரதீபராஜா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கின்றார்.
இவ்வாண்டு புவி மணித்தியாலம் சக்தி நுகர்வைக் குறைத்தல், காலநிலை அவசரநிலையை முன்னிலைப்படுத்துதல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றிற்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற தொனிப்பொருளை முன்வைத்து புவி மணித்தியாலம் கொண்டாடப்படவுள்ளது.
நாங்கள் வாழும் பூமியே எமக்கு யாவற்றையும் தருகின்றது. எமக்கான நீர், எமக்கான வளி, எமக்கான உணவு போன்ற எமக்கான எல்லாவற்றையும் நாம் எமது பூமியில் இருந்தே பெற்றுக் கொள்கின்றோம்.
எமக்காக எங்கள் பூமி கடந்த 05 பில்லியன் ஆண்டுகளாக ஒரு கணமேனும் ஓய்வின்றி உழைக்கின்றது.
அளவற்ற நன்மைகள் யாவற்றையும் தருகின்ற பூமிக்கு நாம் செய்வது முழுவதும் துன்பமே…
பூமியை அழிக்கவும், அதனைத் துன்புறுத்தவும் நாமெல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றோம்.
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்களால் பூமியை நிறைத்து, காடுகளை அழித்து, இரசாயன நச்சுக்களால் நிலத்தையும், நீரையும், வளியையும் நஞ்சாக்கி அவற்றுக்கு துன்பம் செய்கின்றோம்.
பூமி உருவாக்கிய நிலத்தை என்னவோ, நாமே உருவாக்கியது போல் கோடிகளில் விற்கின்றோம். பூமி உருவாக்கிய நீரை நாமே உருவாக்கியது போல் விற்பனை செய்கின்றோம். வெகு விரைவில் வளியையும் விற்பனை செய்வோம்.
பூமியோடு இணையாத எங்களின் வாழ்வு நரகமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
எங்களின் சித்திரவதை தாங்காமல் பூமியும் சிறிய அளவில் தன் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது. இயற்கை அனர்த்தங்களாக, காலநிலை மாற்றமாக, பூமி தன் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றது.
பூமியின் அதிருப்தி கோபமாக மாறுமுன் அதனை சாந்தப்படுத்துவது எங்கள் கடமை.
இந்தக் கடமையின் ஒரு பகுதியாக நாளைய புவி மணித்தியாலத்தைக் கொண்டாடுவோம்.
ஆகவே நாளை இரவு 8.30 முதல் 9.30 மணி வரையான ஒரு மணித்தியாலம் எங்கள் பயன்பாட்டிலுள்ள சகல மின்சாதனங்களையும் நிறுத்தி எங்கள் பூமியை கௌரவிப்போம். குறிப்பாக மின் விளக்குகள் யாவற்றையும் நிறுத்திவைப்போம். இந்த ஒரு மணித்தியாலம் மின்சார பயன்பாட்டை நிறுத்தி எங்கள் பூமியை பாதுகாப்போம்.
இந்த ஒரு மணித்தியாலம் மிக அத்தியாவசியமான தேவை தவிர அனைத்து போக்குவரத்துகளையும் நிறுத்துவோம்.
மேற்கூறிய இரண்டு செயற்பாடுகளின் ஊடாகவும் அதிக சக்தியை குறிப்பாக பெற்றோலியத்தை நாம் நுகர்கின்றோம்.