“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கனிமொழி மாநில அரசியலில் வருவதற்கும் அவர்கள் வெற்றிபெறுவதையும் யார் எதிர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும்.
கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? அவர்களும் ஒரு சீட் அதிகமாக கொடுங்க. கொடுங்க என்று கேட்டார்கள். கனிமொழி ஆளுமையுள்ள பெண். மாநில அரசியலுக்கு வரும்போது உதயநிதியை முன்னிறுத்த இடையூறாக இருக்கும் என்று நினைப்பார்கள். எனவே, அவரை வரவிட மாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அவர் உடன்பிறந்த குடும்பத்து பெண் இல்லை என்று நினைப்பார்கள்.
தவாக தலைவர் வேல்முருகன் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதற்கு கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவர் இப்போதாவது சொல்கிறாரே என்று பாராட்ட வேண்டும். ஒரு சீட்டுக்காக சரணடைந்து சகித்துப் போகாமல் பேசியுள்ளாரே என்று பாராட்டுங்கள். அய்யா ராமதாஸை மக்கள் கைவிடுவார்கள் என்று யாரும் நினைக்கவில்லை. நானெல்லாம் அவரது பிள்ளை. 85 வயதில் தமிழை தேடி யாராவது நடப்பார்களா? தமிழகத்தில், சமூக நீதியை அவரைத்தாண்டி யாராவது பேசி இருக்கிறார்களா? இந்த நாட்டில் ஈ.வெ.ரா என்ன செய்தார்?
இந்த நாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசுவது ராமதாஸ் மட்டும்தான். அவரது கனவை பிள்ளையாக நான் செய்கிறேன். இந்த வயதிலும் இந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணத்தை பாராட்ட வேண்டும். இன்றும் அவர் உட்கார்ந்து பேசி இயங்குகிறார் இல்லையா? தமிழ்நாட்டில் மொத்த கட்சி கூட்டணியை இந்த ஒத்த கட்சி மோதி வெல்லும். மொத்தத்தில் வீரம் வேண்டும் சுடலைமாடா.
மத்திய அரசின் தனியார்மயம், தாராளமயம் உலகமயத்தில் ஒவ்வொரு நாட்டையும் சார்ந்திருந்ததால் இன்று காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸ் உற்பத்தியில் தன்னிறைவு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லும் என்னை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. பேரிடர் காலத்தில் சிலிண்டர் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு. பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால் வண்டியை விட்டுவிட்டுப் போக வேண்டியதுதான். நான் கூட மிதிவண்டியில் ஓட்டு கேட்க போகலாம் என்று இருக்கிறேன். நாங்கள் ரொம்பவே தயாராக இருக்கிறோம்” என்றார்.