பாதிக்கப்பட்ட பலருக்கு வீடோ அல்லது அவர்கள் செலுத்திய பணமோ கிடைக்காமல் போன மோசடிச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, பிராம்ப்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை பீல் பிராந்திய பொலிஸார் (Peel Regional Police) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மே 2025 முதல் பெப்ரவரி 2026 வரை, அடித்தள வீடுகள் (basement apartments) உட்பட வாடகை சொத்துக்கள் தொடர்பான விளம்பரங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இத நம்பி பாதிக்கப்பட்டவர்கள் குத்தகை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, முதல் மற்றும் கடைசி மாத வாடகைக்கான முன்பணத்தையும் செலுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பலர் தங்களது முந்தைய வீடுகளைக் காலி செய்துவிட்டு, புதிய வீட்டிற்குள் குடியேற வந்தபோதே, அந்த வீடுகள் வாடகைக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்து கொண்டதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான 17 சம்பவங்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளடன், இதன் மூலம் $60,000க்கும் (கனடிய டொலர்) அதிகமான நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பிராம்ப்டனைச் சேர்ந்த 27 வயதான சவ்ரீத் கவுர் (Savreet Kaur) என்பவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
$5,000க்கும் அதிகமான தொகை மோசடி செய்தமை தொடர்பாக 38 குற்றச்சாட்டுகள்
-
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை
பிணை விசாரணை வரை அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகத் தளங்கள் மூலம் வாடகைக்கு வீடுகளை முன்பதிவு செய்யும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் நினைவூட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பீல் பிராந்திய பொலிஸாரின் 22வது பிரிவு குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை (22 Division Criminal Investigation Bureau) 905-453-2121 (ext. 2233) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: இக்குற்றச்சாட்டுகள் மற்றும் சந்தேகங்கள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை சந்தேக நபர் குற்றமற்றவராகவே கருதப்படுவார்.