கனடாவின் ரொறன்ரோ நகரில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றர் (50 mm) வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளதை அடுத்து, அந்நகரிற்கு ‘கனடா சுற்றுச்சூழல் பிரிவு’ (Environment Canada) விசேட காலநிலை அறிவித்தல் (Special weather statement) ஒன்றை விடுத்துள்ளது.
இன்று காலை வேளையில் வெப்பநிலை 13 பாகை செல்சியஸ் (13 C) அளவில் நிலவும் அதேவேளை, சுமார் 10 முதல் 20 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியுடன் இக் காலநிலை மாற்றம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏரி ஏரி (Lake Erie) மற்றும் ஏரி ஒன்டாரியோ (Lake Ontario) ஆகியவற்றின் வடக்கே அமைந்துள்ள தெற்கு ஒன்டாரியோவின் சில பகுதிகளை நோக்கி நகரும் ‘தாழமுக்கம்’ (Low-pressure system) காரணமாகவே, இக் குறிப்பிட்ட பகுதிகளில் 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் இம் மழையுடனான காலநிலை, பின்னர் சாரல் மழையாக (Drizzle) மாறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி உத்தியோகபூர்வ ‘மழைவீழ்ச்சி எச்சரிக்கை’ (Rainfall warning) எதுவும் விடுக்கப்படவில்லை. கடுமையான காலநிலையிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இத்தகைய அவசர எச்சரிக்கைகள், மோசமான காலநிலை ஏற்படுவதற்கு “6 முதல் 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே” விடுக்கப்படும் என வானிலை நிறுவனம் விளக்கியுள்ளது.
இன்றைய இரவு வேளையிலும் இப் பலத்த மழைவீழ்ச்சி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அளவிலேயே இக் காலநிலை படிப்படியாகக் குறைவடைந்து சீராகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பகல் வேளையின் அதிகபட்ச வெப்பநிலை 21 பாகை செல்சியஸாக (21 C) பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.