2027 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன்னர், 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு 2026 ஜூன் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தச் சட்டமூலம் தற்போது சட்ட மா அதிபரின் அனுமதியைப் பெற்றுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்ச என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் உரிய யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை, 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் முறையாகச் சமர்ப்பிப்பதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.