மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் ஊடாக பொதுமக்களிற்கு வினைத்திறனும் தரமுமான சேவைகளை வழங்குவதனை பிரதான நோக்கமாகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டிற்கான முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்தாவது பிரதேச செயலாளர் மாநாடு இன்றைய தினம் (26.05.2026) காலை 8.30 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர், முதற்கட்டமாக பிரதேச செயலகத்தின் அலுவலகப்புறச் சூழல், அலுவலக நிர்வாக முறைமை, பொதுமக்களுக்கான சேவை வசதிகள் மற்றும் சேவை வழங்கல் ஏற்பாடுகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில், கடந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்ற நிலைகள் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டதுடன், 2026 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகள், மாவட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், பிரதேச செயலகங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சேவைகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், அரசாங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவை நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன், பிரதேச செயலகங்களின் நிர்வாக, நிதி மற்றும் திட்டமிடல் செயற்பாடுகள், அவற்றின் செயல்திறன் முன்னேற்றங்கள், சமூக நலச்சேவை நடவடிக்கைகள், அபிவிருத்தித் திட்டங்களின் நடைமுறை நிலைகள், 2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் பயன்பாட்டு முன்னேற்றங்கள் தொடர்பிலும் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.
இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ள அடிப்படை மக்கள் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான நிலையான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பிலும் முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இன்றைய மாநாட்டினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ. விஜயகுமார் அவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தார்