கியூபெக் மாகாணத்தில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற 7 வயது சிறுமியின் மரணம் குறித்து, மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல் தனது இறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“இது ஒரு திட்டமிட்ட படுகொலை மட்டுமல்ல, அந்தச் சிறுமியைப் பாதுகாக்க வேண்டிய அரசு அமைப்புகளின் ஒட்டுமொத்த தோல்வி” என்று அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சுமார் 26 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், சிறுமியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்றும், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு (DPJ) ஆகியவற்றுக்கு இடையே முறையான தகவல் பரிமாற்றம் இல்லாமையே, இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தச் சிறுமி தனது பள்ளியில் குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடி எடுத்துச் சாப்பிட்டதை ஆசிரியர்கள் பார்த்துள்ளனர்.
மேலும், அவள் உடலில் காயங்களுடன் பள்ளிக்கு வந்தபோது, அவை அவள் சித்தியால் ஏற்பட்டவை என்று கூறியும் அதிகாரிகள் அந்த விடயம் குறித்து அலட்சியமாக இருந்துள்ளனர்.
சிறுமியின் வீட்டிற்கு காவல்துறையினர் 24 தடவைகள் விசாரணைக்காகச் சென்றுள்ள போதும், ஒருமுறை கூட அந்தச் சிறுமியை மீட்க முயற்சி செய்யப்படவில்லை என, மரண விசாரணை அதிகாரியின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.