திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆஜராக மறுக்கவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று (30) நடைபெறவுள்ள நிதி பற்றிய குழு கூட்டத்தில் ஹர்ஷன சூரியப்பெருமவினால் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்து, அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே கௌசல்ய ஆரியரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பான விவகாரம் குறித்துக் கேட்டறிவதற்காக, திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில் அழைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து அத தெரணவுக்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் கௌசல்ய ஆரியரத்ன, குறித்த சைபர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் அந்த உரை நிகழ்த்தப்படுவதற்கு முன்னர், இச்சம்பவம் குறித்து நிதிப் பற்றிய குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பது பொருத்தமானதல்ல எனப் பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எனவே, திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும அந்த குழுவில் முன்னிலையாக மறுக்கவில்லை எனவும், ஜனாதிபதியின் உரைக்கு பின்னர் அவர் இது தொடர்பான விளக்கங்களை அளிக்க முன்னிலையாவார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.