ஹார்முஸ் நீரிணை விவகாரம் தொடா்பாக ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து தொடா்ந்து பேச்சு நடைபெற்று வருவதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு கப்பல் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கையாளும் இந்த நீரிணைக்கான போக்குவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஈரான், ஓமன் ஆகிய அப்பகுதியின் இரு எல்லை நாடுகளும் பல வாரங்களாக பேச்சு நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஐ.ஆா்.ஜி.சி. செய்தித் தொடா்பாளா் ஹொசைன் மொஹெப்பி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ”ஹார்முஸ் நீரிணையானது, ஈரானுக்கும் ஓமனுக்கும் சொந்தமானது. சுமாா் ஒரு மாதமாக நடைபெற்று வரும் இப்பேச்சுவாா்த்தையில் வருவாய் மற்றும் நீா்ப் பகிா்வு குறித்து இரு தரப்புக்கும் ஏற்புடைய முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.” என்றாா். ஆனால், இறுதி ஒப்பந்தம் எதுவும் இன்னும் முடிவாகவில்லை என மூத்த ஈரான் அதிகாரி ஒருவா் திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.
அமெரிக்கா – ஈரான் இடையே நேரடி மோதல்கள் சமீபத்திய வாரங்களில் குறைந்திருந்தாலும், கப்பல்கள் மீதான தொடா் தாக்குதல்களால் ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்வது இன்னும் அபாயகரமாகவே உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான போக்குவரத்தை மீட்டெடுக்க தற்காலிக கப்பல் பாதை மற்றும் நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்புசைதி நம்பிக்கை தெரிவித்தாா்.