வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் குறித்த தகவல்களை வாஷிங்டன் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் குறித்த விபரங்கள்:
வாஷிங்டன் மெற்றோபொலிட்டன் பொலிஸ் திணைக்களத்தின் இடைக்கால பொலிஸ் மா அதிபர் ஜெப்ரி கரோல் (Jeffrey Carroll) தெரிவிக்கையில், “சந்தேக நபர் இந்தச் சம்பவத்திற்கு முன்னரே அதே ஹோட்டலில் (Washington Hilton) தங்கியிருந்த ஒரு விருந்தினர் (Guest) என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்றார்.
தற்போது அந்த நபர் தங்கியிருந்த அறையை பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், அங்குள்ள ஆவணங்கள் மற்றும் பொருட்களைச் சோதனை செய்து வருகின்றனர். குறித்த நபர் கலிபோர்னியாவின் டொரன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய கோல் தோமஸ் ஆலன் (Cole Tomas Allen) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆயுதங்களுடன் ஊடுருவல்:
சந்தேக நபர் ஒரு ஷாட்கன் (Shotgun), ஒரு கைத்துப்பாக்கி (Handgun) மற்றும் பல கத்திகளுடன் பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கிப் பாய்ந்து வந்துள்ளார். அவர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடையவில்லை என்றும், தற்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் மா அதிபர் உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்புப் படையினருக்கு பாராட்டு:
ரகசியப் பொலிஸ் பணிப்பாளர் சீன் கர்ரன் (Sean Curran) கூறுகையில், துப்பாக்கிதாரி ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு அதிகாரிகள் மிகவும் துணிச்சலாகச் செயல்பட்டதாகப் பாராட்டினார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியை அதிபர் ட்ரம்ப் நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணை நிலை:
இந்தத் தாக்குதலின் நோக்கம் என்ன அல்லது அதிபர் ட்ரம்ப் தான் அவரது இலக்கா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. இந்தச் சம்பவத்தில் அவர் ஒருவராகவே (Lone Wolf) செயல்பட்டதாக பொலிஸார் நம்புகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.