வெளிப்படைத்தன்மை இல்லாமல் சிறந்த ஆளுமையைக் கட்டி எழுப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் சிறந்த ஆளுமைதான் பிரதானம். அதற்கான சீர்திருத்தம் இலங்கையில் அவசியம். ஆளுகை சீர்திருத்தமானது நல்ல முடிவுகளை எடுப்பதற்கான விதிகளை வழங்குகிறது. ஆனால், கலாசாரம்தான் (பண்புகள்) அந்த விதிகளுக்கு உயிர் கொடுக்கிறது என அவுஸ்திரேலியாவின் மேல்பர்ன் லா ட்ரோப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெவ் டிக்சன் தெரிவித்தார்.
இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஒலிம்பிக் இல்லத்தின் ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கை விளையாட்டுத்துறை சங்கங்களில் சிறந்த ஆளுமையைக் பலப்படுத்துதல்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் பேசியபோதே ஜெவ் டிக்சன் இதனைத் தெரிவித்தார்.
தேசிய ஒலிம்பிக் குழுவின் உப தலைவர் நிலூ ஜயதிலக்க, களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அனோமா ரட்நாயக்க, இலங்கையில் இயங்கும் பல்வேறு விளையாட்டுத்துறை சங்கங்கள், சம்மேளனங்களின் பிரதிநிதிகள், விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகள், தேசிய விளையாட்டுத்துறை பேரவைத் தலைவர் பிரியன்த ஏக்கநாயக்க ஆகியோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.
சிவராஜா கோபிநாத்தினால் நெறியாள்கை செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜெவ் டிக்சன், ‘அவுஸ்திரேலிய விளையாட்டுத்துறை பேரவையினால் வகுக்கப்பட்ட மிக உயரிய கட்டமைப்பைக் கொண்ட ஆளுமை (நிருவாகம்) முறைமை அவுஸ்திரேலியாவில் அமுலில் இருக்கிறது. அதேபோன்று இலங்கையிலும் இருப்பது விளையாட்டுத்துறையின் எதிர்காலத்திற்கு சிறந்ததாகும். அத்துடன் அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரே ஒரு மூலோபாய திட்டம், அணுகுமுறை இருக்க வேண்டும். அது இலக்கை நோக்கிய குறிக்கொளைக் கொண்டிருக்க வேண்டும். இதனைக் கருத்தில்கொண்டுதான் விளையாட்டுத்துறையில் அரசாங்கம் முதலீடு செய்யவேண்டும். அந்த முதலீடுகள் எந்தளவு கனிகொடுக்கிறது என்பது குறித்து வருடா வருடம் திறன்மதிப்பீடு செய்வது அவசியம்.
‘அவுஸ்திரேலியாவில் விளையாட்டுத்துறை நிறுவனங்களின் நிறைவேற்று அல்லது பணிப்பாளர் சபைகளில் 5 முதல் 9 உறுப்பினர்களே இடம்பெறுகின்றனர். இது கருத்து பேதங்களின்றி சரியான தீர்மானங்களை வெளிப்படைத்தன்மையுடன் எடுக்க உதவுகிறது. ஆனால், இலங்கையில் ஒவ்வொரு விளையாட்டுத்துறைக்கான நிறைவேற்றுச் சபையிலும் 17 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இது பேதங்களுக்கு வழிவகுப்பதுடன் சிறந்த ஆளுமைபைப் பேணுவதில் சிக்கலைத் தோற்றுவிக்கும்.