வெருகல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை (22) மூதூர் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கானது மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி வசீம் அஹமட் முன்னிலையில் இன்றைய தினம் நகர்த்தல் பத்திரத்தின் மூலம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றவாளிகள் தரப்பில் முன்னிலையாகிய சகிதீன் மற்றும் முகமட் ஆகிய சட்டத்தரணிகளால் பிணை விண்ணப்பம் கோரி சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 6 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வரும் 29ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளது.
கந்தளாய் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (டிசிடிபி) மூதூர் நீதிமன்றில் 23 பேருக்கு எதிராக BR/736/25 என்ற வழக்கின் ஊடாக தண்டணை சட்டக்கோவை 140, 183, 186 மற்றும் 344 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையியே கைது செய்யப்பட்ட 6 பேரும் இன்று (22) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய 17 பேரும் பொஸிஸாரினால் தேடப்பட்டு வருவதாகவும் அவர்களை சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் சட்டத்தரணி சகிதீன் தெரிவித்தார்.
கடந்த 13ஆம் திகதி அன்று சனிக்கிழமை நிவாரணம் வழங்கக்கோரியும் பின்னர் பிரதேச செயலாளரை இடம்மாற்றம் செய்யக்கோரியும் பொதுமக்கள் சிலர் பிரதேச செயலக வளாகத்தினுள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதன்போது அங்கு சமாதானம் பேச வந்த மாவட்ட செயலாளரையும் சிறைப்பிடித்ததாகவும், திட்டமிட்டு குழப்ப நிலையை தோற்றுவிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 23 பேரை பொலிஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஒருவரை கைது செய்து திங்கட்கிழமை (22) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வயோதிபப் பெண் உட்பட மேலும் ஐவர் அடங்கலாக குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் மொத்தமாக ஆறுபேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் 17 பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.