தஞ்சை
மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீட்டில் தவெக அரசு மெத்தனம் காட்டுவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“முதல்வர் விஜய்க்கு மக்கள் முக்கியமில்லை”:
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “தலைமைச் செயலகத்தில் தனக்கான அறையை மாற்றுவதுதான் முதலமைச்சர் விஜய்க்கு முக்கியமாகப் படுகிறது; மக்கள் முக்கியமில்லை. நானும் அதே அறையில்தான் இருந்தேன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் அங்குதான் இருந்தார். ஆனால் தற்போதைய முதல்வர் நடிகர் என்பதால் மிகவும் நவீனமயமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்துத் தனது அறையை மாற்றுகிறார். விவசாயிகள் உணவுக்கு வழியின்றித் தவித்து வரும் இந்த நெருக்கடியான நேரத்தில், முதலமைச்சர் விஜய்க்கு அறை மாற்றம்தான் முக்கியமா?” என்று கடுமையாக விமர்சித்தார்.
விவசாயிகளுக்கு துரோகம் – ரீல்ஸ் போடுவதில் தீவிரம்:
தொடர்ந்து பேசிய அவர், “விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் கட்சி அதிமுக மட்டுமே. அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், தற்போதைய தவெக அரசு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள் மீது இந்த அரசுக்குச் சிறிதும் கவலையில்லை. அரசு நிர்வாகம் ரீல்ஸ் (Reels) போடுவதில்தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறதே தவிர, காவிரியில் இருந்து உரிய நீரைப் பெற எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சியும் எடுக்கவில்லை,” என்று குற்றம் சாட்டினார்.
“கர்நாடகாவுக்கு கடும் அழுத்தம் தர வேண்டும்”:
மேலும், “காவிரி டெல்டா பகுதியில் 5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்பட வேண்டிய நிலையில், தற்போது வெறும் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே பாசனம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மாநில அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பட்ஜெட்டிலும் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எனவே, உடனடியாகப் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாநில அரசு விழிப்போடு செயல்பட்டுச் சம்பா சாகுபடிக்குத் தேவையான நீரைத் திறக்க கர்நாடக அரசுக்குக் கடுமையான அழுத்தம் தர வேண்டும். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும்,” என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
#EdappadiPalaniswami #EPS #AIADMKProtest #Thanjavur #CauveryIssue #Mekedatu #ChiefMinisterVijay #ThalapathyVijay #TVKGovernment #TamilNaduFarmers #TNPolitics #TamilNaduNews #TNNewsUpdates #ViralNewsTN #TrendingTN