வெரிட்டேரிசர்ச் (Verité Research) நிறுவனம் தனது முன்னோடி ‘வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கானமையத்தின்’ (Budget Proposals Hub) இரண்டாவது பதிப்பைத் தொடங்கியுள்ளதுடன், 2027 தேசிய வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகத் தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு நாட்டின் மக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
2026 வரவுசெலவுத் திட்டத்திற்கு முன்னதாகக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி கண்ட இத்திட்டம், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தொடரப்படுகிறது.
கடந்த ஆண்டில் இலங்கை இலவங்கப் பட்டையிலிருந்து ஔடதப் பொருட்களைத் தயாரிக்கும் தேசிய அளவிலான வேலைத்திட்டம் முதல் ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் கழிவறைகளைக் கட்டுவது வரையிலான பல்வேறுபட்ட யோசனைகள் இதன் மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
சர்வதேச மதிப்பீடுகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் குறைபாட்டை இம்மையம் நிவர்த்தி செய்கின்றது.
2025 ஆம் ஆண்டின் திறந்த வரவு செலவுத் திட்டக் கணிப்பீட்டில் (Open Budget Survey 2025), பொதுமக்களின் பங்களிப்புத் தொடர்பாக இலங்கை 100 க்கு 9 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
உலகளவில் மிகவும் பலவீனமான செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படும் இது, பொதுமக்களின் பணம் எவ்வாறு திரட்டப்படுகின்றது மற்றும் செலவிடப்படுகின்றது என்பதன் வழிமுறைகளுடன் இலங்கையர்கள் இணையும் வழிகளில் உள்ள பாரிய பலவீனங்களைப் பிரதிபலிக்கின்றது.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான மையமானது (BPH) பொதுமக்களின் பங்களிப்பிற்காக மூன்று வழிகளை வழங்குகின்றது:
பங்கேற்பாளர்கள் தளத்தின் அதிகாரப்பூர்வ வரவு செலவுத் திட்ட முன்மொழிவு படிவத்தைப் பயன்படுத்தி, BPH ஊடாக முழுமையான முன்மொழிவொன்றைச் சமர்ப்பிக்க முடியும்.
பங்கேற்பாளர்கள் BPH இல் பதிவேற்றுவதற்காகத் தமது முன்மொழிவுக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்; அத்துடன் அவற்றை முழுமையான முன்மொழிவாக உருவாக்குவதற்குத் தேவையான உதவிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
பங்கேற்பாளர்கள் BPH இல் பதிவேற்றப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு வாக்களிக்க முடியும். இது ஜனநாயகக் குரலையும் பொதுமக்களின் பங்களிப்பையும் அதிகரிக்கிறது.
வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கான மையமானது (Budget Proposals Hub) publicfinance.lk என்ற இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முழுமையாகக் கிடைக்கப்பெறுகின்றது.
2027 வரவுசெலவுத் திட்டத்திற்கான பொதுமக்களின் முன்மொழிவுகள் 2026 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு அல்லது இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதற்கு pfp@veriteresearch.org என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ள முடியும்.