வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – தொல்லியல் திணைக்களத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சாணக்கியன் வலியுறுத்தல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு நியாயமானதும், அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துடன் நடைபெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்களுடன் இணைந்து நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினோம்.
தொல்லியல் திணைக்களம் இன, மத பாகுபாடின்றி செயற்படுகிறது என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டுமெனில், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள 54 கடைகள் அகற்றப்பட வேண்டும் என்பதையும், போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்குகள் மீளப் பெறப்பட வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினேன்.
அதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, தாந்தாமலை முருகன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணப்படும் தொல்லியல் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆராய்ந்து, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நான் கோரிக்கை விடுத்தேன்.
மேலும், தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினையில் ஒரு மதத்தை மட்டுமே பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதுடன், ஏனைய மதங்களும் இனங்களும் பிரதிபலிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம். அனைத்து இனங்களையும் மதங்களையும் சமமாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அந்த இலச்சினை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம்.
அதேவேளை, குச்சவெளி பிரதேசத்தில் 37 கிலோமீற்றர் தூரப்பகுதிக்குள் 42 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறித்தும், அவற்றுக்கும் தொல்லியல் திணைக்களத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நீண்டகாலமாக முன்னெடுக்கப்படாமல் உள்ள மணித்தூண் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினேன்.
அதேபோன்று, குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் தங்களது வழிபாட்டு உரிமையை எந்தவித தடையும் இன்றி சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கான சட்டப் பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலம் பெறப்பட்ட தீர்ப்புகள் முறையாக அமுல்படுத்தப்பட்டால் வழிபாட்டு உரிமைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது. ஆனால் நடைமுறையில் நீதிமன்ற உத்தரவுகளை மீறிய வகையில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன என்பதையும் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினேன்.
வடக்கு, கிழக்கில் தொல்லியல் என்பது எந்த ஒரு இனத்திற்கோ மதத்திற்கோ மட்டுமே உரித்தான விடயம் அல்ல. அது அனைத்து மக்களினதும் வரலாறு, பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. எனவே, சட்டம், நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை தொல்லியல் திணைக்களம் வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.