சென்னை:
2024-25 ஆம் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்திற்காகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,109.92 கோடி நிதியை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் பின்வருமாறு:
நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற நிதிப் பங்கீட்டு விகிதத்தில் செயல்படுத்தும் திட்டமாகும். இது ‘PM SHRI’ பள்ளிகள் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க, ‘தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்த வேண்டும்’ மற்றும் ‘அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட வேண்டும்’ என மத்திய அரசு நிபந்தனை விதித்து, நிதியை நிறுத்தி வைத்துள்ளது.
நிலுவையில் உள்ள நிதி விவரம்
-
2024-25: ரூ. 1,788.79 கோடி
-
2025-26: ரூ. 1,496.04 கோடி
-
2026-27: ரூ. 1,825.09 கோடி
-
மொத்தம்: ரூ. 5,109.92 கோடி
உச்ச நீதிமன்ற வழக்கும், தமிழக அரசின் நிலைப்பாடும்
மத்திய அரசு நிதியை விடுவிக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளுக்கான கல்வி உரிமைச் சட்ட (RTE) செயல்பாடுகளுக்காக மட்டும் ரூ.713.99 கோடியை மத்திய அரசு விடுவித்தது. பிற கூறுகளுக்கான நிதி இன்னும் வரவில்லை.
தமிழ்நாடு அரசு, தனது இருமொழிக் கொள்கை உள்ளிட்ட நீண்டகாலக் கல்விக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளதாகவும், பள்ளிக்கல்வித் திட்ட நிதியை வேறு எந்தத் திட்டத்துடனும் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.
மாநில நிதியில் தடையின்றிச் செயல்படும் திட்டங்கள்
மத்திய அரசின் நிதி வராத நிலையிலும், தமிழக அரசு தனது சொந்த மாநில நிதியைக் கொண்டு பள்ளிக்கல்வித் திட்டங்களைத் தடையின்றிச் செயல்படுத்தி வருகிறது. இதற்காக 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளில் ரூ.2,014.63 கோடியும், 2026-27 நிதியாண்டிற்காக ரூ.647.38 கோடியும் மாநில அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் உண்டு-உறைவிடப் பள்ளிகள், மாணவர்களுக்கான போக்குவரத்து, மின்னுரு (Digital) கல்வி மேலாண்மை உள்ளிட்டவை தடையின்றி இயங்கி வருகின்றன.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சரமாரி கேள்வி
இந்த விவகாரம் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் த.வெ.க. அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் தனது பதிவில், “இதைப் பற்றி மானியக் கோரிக்கையில் பேச வேண்டிய துறைசார் அமைச்சர் ஏன் மௌனம் காத்தார்? சட்டமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ பேசாதற்குக் காரணம் என்ன? ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதைப் பற்றி த.வெ.க. அரசு மக்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும்” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
#SchoolEducation #TamilNaduGovernment #UnionGovernment #NEP2020 #PMSHRI #AnbilMahesh #TVKGovernment #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #LatestNewsTN #TrendingTN #TNNewsUpdates