யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள “அரவணன்” நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம் இன்று (14.07.2026) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டு வரும் “Paalam” the Bridge to Humanity, Australia அமைப்பின் நிதி அனுசரணையுடன், சுமார் 3 கோடி ரூபா செலவில் முதற்கட்டமாக இந்நவீன சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், உயர்தர மருத்துவ வசதிகளையும் மனிதநேய பராமரிப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிலையத்தை இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், Bridge to Humanity அமைப்பின் பிரதிநிதிகள், மருத்துவர்கள், தாதியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இந்நோய்த் தடுப்பு சிகிச்சை நிலையம், இறுதிக்கட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களின் வாழ்வின் இறுதிக்காலத்தை வலி குறைந்த, அமைதியான மற்றும் கண்ணியமான சூழலில் கழிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையுடன் மட்டுமல்லாமல், உளவியல் ஆலோசனை, உணர்வுபூர்வ ஆதரவு, குடும்ப உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் உள்ளிட்ட முழுமையான Palliative Care சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த மையம் செயல்படவுள்ளது.