யாழ்ப்பாண நகர் பகுதியில் 16 வயது மாணவன் ஒருவன் தனது தங்கையின் தங்க மோதிரத்தைக் களவாடி, அதை விற்றுத் தனது காதலிக்கு ஐபோன் (iPhone) வாங்கிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் தங்கைக்கு அண்மையில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவின் போது, உறவினர் ஒருவரால் அந்தத் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
விழா முடிவில் மோதிரம் மாயமானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், அந்த மாணவனின் காதலி (மாணவி) ஒரு புதிய ஐபோன் வைத்திருந்தது குறித்து அவரது வீட்டில் சந்தேகம் எழுந்தது.
காதலியின் உறவினர்கள் நடத்திய விசாரணையில், தனது காதலன் தான் அந்தப் போனை வாங்கிக் கொடுத்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மாணவனிடம் விசாரித்த போது, தங்கையின் மோதிரத்தை விற்று ஐபோன் வாங்கிய உண்மையை அவன் ஒப்புக்கொண்டான்.
இவர்கள் இருவரும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி பயின்று வருவதும், நீண்ட நாட்களாகக் காதலித்து வருவதும் தெரியவந்துள்ளது.
தங்கையின் நகையைத் திருடி காதலிக்கு விலையுயர்ந்த பரிசு வழங்கிய இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.