கிளிநொச்சி – ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மேலும் இருவர் பலியாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது காரில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். படுகாயமடைந்த மூவரில் இருவர் தற்போது உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை காருக்குள் நசியுண்ட இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.