சென்னை
தவெக அமைச்சர் ரமேஷ் எழுப்பிய கேள்வியால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா என்ற விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துச் சட்டமன்ற உறுப்பினர் கையேடு என்ன சொல்கிறது என்ற சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அவையில் வெடித்த காரசார விவாதம்:
மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை கண்ணியம் குறித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்த தவெக அமைச்சர் ரமேஷ், “8 கோடி மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் அமர்ந்துள்ளார்; அவருக்குக் கண்ணியத்தைச் சொல்லிக்கொடுங்கள்,” எனச் சாடினார். இதற்குப் பதிலடி கொடுத்த ஓபிஎஸ், “எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது முதல்வர் எழுந்து நிற்பாரா?” எனக் கேள்வி எழுப்பினார். இறுதியாகப் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “எழுந்து நிற்பது கட்டாயமில்லை; அதனை அவை உறுப்பினர்களின் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன்,” என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சட்டசபை கையேடு விதிகள் சொல்வது என்ன?:
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கையேட்டின்படி, பேரவைக்குத் தலைமை வகிக்கும் பேரவைத் தலைவர் (சபாநாயகர்) அவைக்குள் நுழையும்போது மட்டுமே அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும். அவர் அமர்ந்த பிறகே மற்றவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர வேண்டும் என்பது மரபு. முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற எந்தக் கட்டாய விதியும் கையேட்டில் இடம்பெறவில்லை.
பேரவையின் முக்கிய கட்டுப்பாடுகள்:
பேரவைத் தலைவர் பேசும்போது உறுப்பினர்கள் குறுக்கிடவோ, வெளியேறவோ கூடாது. அலுவல் நேரம் தவிரச் செய்தித்தாள் வாசிப்பது, கூச்சலிடுவது, சத்தமாகச் சிரிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்களை உள்ளே கொண்டுவருவது போன்றவற்றுக்குக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், உறுப்பினர்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லியோ ‘நீங்கள்’ என்றோ நேரடியாக சுட்டி அழைக்கக் கூடாது; ‘மாண்புமிகு உறுப்பினர்’ அல்லது ‘மாண்புமிகு நண்பர்’ என்றே கண்ணியமாக அழைக்க வேண்டும் எனச் சட்டசபை விதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
#TNAssembly #TNAssemblyRules #ChiefMinisterVijay #JosephVijay #UdhayanidhiStalin #OPanneerselvam #TVKGovernment #DMK #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates