மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டியின் மீது பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், விபத்தில் காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 9.20 மணியளவில் மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீதே தலகொல்ல பகுதியில் வைத்து மரம் வீழ்ந்துள்ளது.
காயமடைந்தவர்கள் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 37 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரம் வீழ்ந்ததன் காரணமாக மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.