மொரட்டுவை, கட்டுபெத்தையில் உள்ள ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் “மின்னல் பாதுகாப்பு மற்றும் மின்னல் அபாயங்களிலிருந்து உங்கள் நிறுவனத்தைப் பாதுகாத்தல்” என்ற தலைப்பிலான ஒரு நாள் செயல்முறைப் பயிற்சிப் பட்டறையும் அதில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவும் நேற்று (16) வியாழக்கிழமை மாலை (16) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இயற்கையின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அழிவுகரமான நிகழ்வுகளில் ஒன்றான மின்னல் தாக்கமானது, மனித உயிர்கள், கட்டடங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு அமைப்புகள், மின்சாரக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற பின்னணியில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்கத்தினால் சுமார் 50 பேர் உயிரிழப்பதுடன், இதனால் ஏற்படும் சொத்து மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களின் மதிப்பு ஆண்டுதோறும் சுமார் ஒரு பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக உணர்திறன் மிக்க மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருவதால், இந்த மின்னல் அபாயத்தின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்தத் தேசியத் தேவையைக் கருத்திற்கொண்டு, நவீன தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இலங்கையின் முன்னணி நிறுவனமான ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம், நாட்டில் தேசிய மின்னல் பாதுகாப்பு மையம் ஒன்றை நிறுவுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் முதற்படியாக, மின்னல் பாதுகாப்புத் துறையில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன, இலங்கையில் தற்போது மின்னல் பாதுகாப்பு அமைப்புகளை சட்டப்பூர்வமாக முறைப்படுத்துவதற்கும், நிறுவப்பட்ட அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்கும் அல்லது அவற்றுக்கான உரிமங்களை வழங்குவதற்கும் முறையானதொரு கட்டமைப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
மேலும், புவி வெப்பமயமாதல் காரணமாக உலகளாவிய வெப்பநிலை 1 செல்சியஸ் அதிகரிக்கும் போது, மின்னல் தாக்கும் வீதம் 12 சதவீதத்தால் அதிகரிப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், இலங்கையின் சில பகுதிகளில் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மின்னல் ஆபத்து 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்தார்.
மொபைல் போன்கள் முதல் அனைத்து மின்னணு சாதனங்களும் இன்று மிகவும் உணர்திறன் மிக்கவையாக மாறியுள்ளதால், மின்னல் தாக்கத்தின் போது ஏற்படும் மின் கசிவுகள் மற்றும் தூண்டல்களால் (Induction) பாரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனிதர்கள் மட்டுமன்றி யானைகள் உள்ளிட்ட விலங்குகளும் இதனால் உயிரிழக்கின்றன. இந்த தேசியப் பேரழிவிலிருந்து சொத்துக்களையும் உயிர்களையும் பாதுகாக்க தேசிய மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு ஆரம்பக் கட்டமே இப்பயிற்சிப் பட்டறை என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.