கனடா, மிசிசாகா (Mississauga) பகுதியில் இன்று காலை நடைபெற்ற விசாரணை ஒன்றின் போது, காவல்துறை அதிகாரி ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீல் பிராந்திய காவல்துறை (Peel Regional Police) சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள தகவலின்படி, அதிகாரிகள் டொர்ப்ராம் வீதி (Torbram Road) மற்றும் டெரி வீதி கிழக்கு (Derry Road East) ஆகிய பகுதிகள் இணைந்திடும் இடத்தில் விசாரணை ஒன்றை நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் அந்தப் பாதைகளில் நீண்ட நேரப் போக்குவரத்து நெரிசல் மற்றும் வீதி மூடல்கள் இருக்கும் என ஓட்டுநர்களுக்கு ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர் காலை 9:30 மணியளவில் வெளியான கூடுதல் தகவல்களின்படி, சந்தேக நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த அதிகாரி ஒருவரை நோக்கிச் சுட்டுள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக அந்த அதிகாரி மீது குண்டு பாயவில்லை என்பதுடன், அவர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ ரீதியாகக் குணமடைந்துள்ளதாக (medically cleared) அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எவ்வாறான காயம் ஏற்பட்டது அல்லது பதிலுக்குப் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா என்பது குறித்த விபரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்த துல்லியமான பின்னணிச் சூழல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது வரை அந்தப் பகுதியில் வீதி மூடல்கள் தொடர்வதுடன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.